வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல்! சஜித்
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (sajith premadasa) யூரியுப் தளத்தின் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டு வரவு செலவுத் திட்டம் குறித்து தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
நாட்டு மக்கள் முற்போக்கான வரவு செலவுத்திட்டம் ஒன்றையே எதிர்ப்பார்த்திருந்த போதிலும், அது வெறுமனான ஒன்றாகவே காணப்படுகின்றது. மக்கள் எதிர்ப்பார்த்ததைப் போன்று மக்கள் நேய வரவு செலவுத்திட்டத்திற்குப் பதிலாக பிற்போக்கான ஒரு புஸ்வாணமே கிடைத்துள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு திட்டமிடலும் இல்லை. வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை குறைப்பதற்கான எந்தவொரு திட்டமும் காணப்படவில்லை. வாழ்க்கை செலவு அதிகரிப்பை குறைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை.
இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும் இல்லை. விவசாயியை வலுவூட்டுகின்ற வழிமுறைகளும் காணப்படவில்லை. வருமான மார்க்கங்களை உருவாக்கும் வழிமுறையும் காணப்படவில்லை.
சோமாலியா பாணியிலான மக்களை ஏமாற்றும் ஒரு வரவு செலவுத்திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் கருதப்படுகின்றது, குறுகியகால, மத்தியகால, நீண்டகால வேலைத்திட்டங்களற்ற வெற்று ஆவணமாகும்.
அழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அரசாங்க ஊழியர்களுக்கும், தனியார்த்துறை ஊழியர்களுக்கும் எந்தவொரு சம்பள அதிகரிப்பும் முன்மொழியப்படாத ஒரு வரவு செலவுத்திட்டமாகும் என அவர் தெரிவித்தார்.