அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம் ; யாழ். மாநகரசபை உறுப்பினர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அனோஜன் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுடன் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகமும் இணைந்து நிற்பதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மனித உயிரைப் பாதுகாப்பது என்ற மனிதாபிமான அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாண முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும், அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் தமது சமூகம் உறுதியாக இருப்பதாக அப்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனோஜன் விவகாரத்தை அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது உயிரைப் பாதுகாத்து விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையான சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரத்தை பயன்படுத்தி இனங்களுக்கிடையே முரண்பாடுகள் மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் முயற்சிகளிலிருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது முக்கியமான பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதுடன், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதும் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அனோஜன் தொடர்பான வழக்கில் சவூதி தரப்பின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.