தேர்தல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறை காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
தனியார் துறைகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த விடுமுறைகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குதல்.
தமது வாக்கை அளிப்பதற்காக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில்தருநர்கள் நடவடிக்கையெடுத்தல் வேண்டுமென உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 84அ(1) ஆம் பிரிவின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 2025.05.06 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போதும் அதனை உரியவாறு நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
2. அரச பிரிவின் அலுவலர்களின் விசேட விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12.3 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்காக ஆகக் குறைந்தது இரண்டு மணித்தியால காலமொன்று வாக்களிக்கச் செல்வதற்குத் தேவைப்படுமெனக் கருதக்கூடிய தொடர்ச்சியான காலப்பகுதியொன்றுக்கு சம்பள இழப்பற்ற விசேட விடுமுறை வழங்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. தனியார் துறைகளில் விசேட விடுமுறை வழங்கும் விதிமுறையொன்றை பெரும்பாலான தொழில்தருநர்கள் தனது தொழிலாளர்களுக்கு வாக்களிக்கச் செல்ல அனுமதி வழங்குவதில்லையென கடந்த கால பல தேர்தல்களின் போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையால் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு தேர்தலொன்றின் போது வாக்களிப்பதற்காக செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் விடுமுறை வழங்குவதற்காக தூரம் மற்றும் காலம் ஆகியனவற்றுக்கிடையில் தொடர்புபடுத்தலொன்றைத் தயாரிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கமைய 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குரியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட ஆணையாளர்கள்/ அதன் அலுவலர்கள், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர், தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் அதன் அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் அலுவலர்கள் ஒன்று கூடி அது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதன் பின்னர் கீழ்காணும் அட்டவணைக்கு இசைவாக தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை வழங்க தொழில்தருநர்கள் நடவடிக்கையெடுத்தல் பொருத்தமாகுமெனத் தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
வாக்களிப்பதற்காக கடமை நிலையத்திலிருந்து தனது வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ள தூரத்தின் அளவு - வழங்க வேண்டிய ஆகக் குறைந்த விடுமுறைக் காலம்
கி.மீ. 40 அல்லது அதற்குக் குறைவாயின் - அரை நாள் (1/2)
கி.மீ 40 க்கும் 100 க்கும் இடைப்பட்டதெனில் - ஒரு நாள் (1)
கி.மீ 100 க்கும் 150 க்கும் இடைப்பட்டதெனில் - 11/2 நாட்கள்
கி.மீ 150 க்கு அதிகமாயின் - 2 நாட்கள்
மேலேயுள்ள அட்டவணையில் முன்மொழியப்பட்டிருப்பது வழங்க வேண்டிய ஆகக் குறைந்த காலமென்பதுடன் நாட்டிலுள்ள ஒரு சில வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று திரும்பி வருவதற்கு 3 நாட்கள் தேவைப்படக்கூடிய கணிசமானளவு இடங்களும் இருக்கின்றமையால் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மூன்று நாட்கள் விடுமுறை வழங்க வேண்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென அங்கு வலியுறுத்தப்பட்டது.
4. 2025 மே மாதம் 6 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள இத்தேர்தலின் போது மேலே 03 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை மற்றும் அதற்கு முன்னால் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு இத்தேர்தலின் போது தொழிலிலீடுபட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்காக விசேட விடுமுறையை வழங்குமாறு அனைத்து தொழில்தருநர்களிடமிருந்தும் தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.
5. இதன்போது, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எழுத்து மூலமாக விடுமுறை கோர வேண்டுமென்பதுடன், அனைத்து தொழில்தருநர்களும் விசேட விடுமுறைக்காக விண்ணப்பிக்கின்றவர்களது விடுமுறை வழங்கப்படும் கால எல்லை தொடர்பானதுமான ஆவணமொன்றைத் தயாரித்து அதைக் கடமை நிலையத்தில் காட்சிப்படுத்தி வைக்கவும் வேண்டும்.
6. மேற்கூறப்பட்ட பரிந்துரைகளுக்கிணங்கியொழுகி தமது நிறுவனத்தில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாக்களிக்கச் சென்று திரும்பி வருவதற்குப் போதுமானளவு காலஅவகாசம் மற்றும் சம்பளம் குறைக்கப்படாத விசேட விடுமுறையை வழங்குமாறு அனைத்து தொழில்தருநர்களிடமும் தயவன்புடன் கேட்டுக் கொள்வதோடு, நிறுவனத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாக்களிப்பதற்கு சென்று திரும்பி வருவதற்காக போதுமானளவு ஆகக் குறைந்த விடுமுறையைப் பெற்றுக் கொள்வது அனைத்து தொழிலிலீடுபட்டுள்ளவர்களதும் பொறுப்பென்பது தயவன்புடன் வலியுறுத்தப்படுகின்றது.
7. மேற்கூறப்பட்ட விதிமுறைகளை மீறுகின்ற அல்லது அதன் பிரகாரம் செயற்படுவதிலிருந்து விலகியிருக்கின்ற எவரேனும் இருப்பின், அவர்கள் மறியற்தண்டனைக்கு அல்லது குற்றப்பணமொன்றிற்கு ஆளாக நேரிடுமென மேலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சமன் ஸ்ரீ ரத்நாயக்க தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.