ஆளும் தரப்பை திகைக்க வைத்த சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு
ஆளும் தரப்பில் பங்காளிக் கட்சியாக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மற்றுமொரு தலையிடியாக அமைந்துள்ளதுடன், அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணியை ஏற்படுத்த தமது கட்சி தயாராக இருப்பதக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியுடனான கூட்டணி, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்காவின் காலத்திலும் மகிந்த ராஜபக்ச காலத்திலும் அமைக்கப்பட்டதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் காலத்திலும் 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து ஆட்சியமைத்ததாகவும் அவர் கூறினார்.
அதன் ஊடாக சில செயற்பாடுகளை நிறைவேற்றினர். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது என்பது புதிய விடயம் என நான் நினைக்கவில்லை.
இதனால், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்தக் கூடிய சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன. தற்போது இந்த நிலைமை தெளிவாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது கொள்ளையர்கள், கொலைகாரர்கள் இல்லை.
சுதந்திரக் கட்சி தற்போது தூய்மையான கட்சியாக இருக்கின்றது. இதனால், மக்கள் விடுதலை முன்னணி போன்ற தூய்மையான கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றதாகவும் இது சம்பந்தமாக இன்னும் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறினார்.
இடதுசாரிகள் கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்றே சுதந்திரக்கட்சி கருதுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக விரிவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.