டிஜிட்டல் கைது' ; 8 மணிநேரம் தவித்த அங்கிதா ஸ்ரீவஸ்தவா
இந்திய நகைச்சுவை கலைஞர் அங்கிதா ஸ்ரீவஸ்தவா போலி 'டிஜிட்டல் கைது' மூலம் 9 லட்சம் இந்திய ரூபாய்களை இழந்த சைபர் மோசடி சம்பவத்தை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
கொரியர் நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாகக் கூறி அங்கிதாவைத் தொடர்பு கொண்ட நபர், ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட அவரது பெயரிலான பொதியில் போதைப்பொருள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இருவருடன் காணொளி அழைப்பு
பின்னர், காவல்துறை சீருடையில் இருந்த இருவருடன் காணொளி அழைப்பு மூலம் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது கெமராவை அணைக்கக் கூடாது, வீட்டை விட்டு வெளியேறக் கூடாது மற்றும் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என அங்கிதாவுக்கு உத்தரவிடப்பட்டு, சுமார் 8 மணித்தியாலங்கள் காணொளி அழைப்பு மூலம் அவர் கண்காணிக்கப்பட்டுள்ளார்.
இந்த கடுமையான மன அழுத்த சூழ்நிலையை உண்மை என நம்பிய அவர், 900,000 இந்திய ரூபாய்களை மோசடிக்காரர்களின் கணக்கிற்கு மாற்றியுள்ளார். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த 'டிஜிட்டல் கைது' மோசடிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, யூடியூப் தளத்தில் தனது நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக அங்கிதா ஸ்ரீவஸ்தவா இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.