முதலை இழுந்து சென்றவர் சடலமாக மீட்பு; அம்பாறையில் துயரம்
அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலையொன்று நேற்று (04) மாலை குறித்த நபரை இழுத்துச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்ப்டுள்ளார்.
இருளின் மத்தியில் நேற்று இரவு 10 மணி வரை தொடர் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. காணாமல்போனவர் ஒலுவில் 01 பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

கல்ஓயா ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை எடுக்க மற்றொரு நபருடன் நீந்திச் சென்றபோது, முதலை அவரை இழுத்துச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று (5) காலை மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாயமான நபர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். காணாமற்போனவர் முதலை கடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலத்தின் மீதான மரண விசாரணை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கிணங்க திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு முதலை தாக்கியதனால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.