அம்பாறை பெண் வைத்தியர் மரணம் ; ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்
அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய இயன்முறை வைத்திய நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நேற்று (17) பிற்பகல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து சடலத்தை மீட்ட பொலிஸார், அது அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்பவருடையது என்பதை உறுதிப்படுத்தினர்.

விசாரணைகளில், உயிரிழந்த பெண் கடந்த ஜூன் 3 முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
அங்குள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் இருந்த அவரை காதலன் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கண்டி கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையே கடந்த எட்டு மாதங்களாக காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், கனடா செல்லும் நோக்கில் பெண் பல்வேறு வழிகளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கடனாகப் பெற்று காதலனிடம் வழங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கடன் சுமை காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், காணாமல் போவதற்கு முன்னர் தனது சகோதரர் மற்றும் மருத்துவருடன் தொடர்புகொண்டு மன உளைச்சல் குறித்து தெரிவித்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார், சந்தேகநபரின் மற்றொரு காதலிக்குச் சொந்தமானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபரான தினேத் திஸாநாயக்கவை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.