அமெரிக்காவின் உலக அரசியல் ; இலங்கையும் அதில் சிக்குமா?
வெனிசுலா மீது அமெரிக்கா இன்று (03) அதிகாலை பாரிய இராணுவ தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாகவும், இதன் போது வெனிசுலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இலங்கையுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இலங்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்காவுடன் தொடர்புடைய சில இராணுவ ஒப்பந்தங்கள் இதுவரை முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையில் உள்ளன.
அவற்றில், இலங்கை – அமெரிக்கா இடையில் முன்மொழியப்பட்ட சோபா (SOFA – Status of Forces Agreement) ஒப்பந்தம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த சோபா ஒப்பந்தத்திற்கு தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில அரசியல் தரப்புகள் கடந்த காலங்களில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

இதேவேளை, வெனிசுலா விவகாரத்தில் சீனா உள்ளிட்ட சில நட்பு நாடுகள் வெளிப்படையான ஆதரவை வழங்காத நிலையில், சர்வதேச அரசியல் சூழல் மேலும் சிக்கலடைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பின்னணியில், அண்மையில் நிவாரண பணிகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவத்தினர், சோபா ஒப்பந்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதைப் போல செயல்பட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் இலங்கை – அமெரிக்கா இராணுவ உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பில் மீண்டும் தீவிர விவாதங்கள் எழலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.