வைத்தியசாலைகளில் சடலங்கள் குவிந்து கிடப்பதாக கூறப்பட்ட விவகாரம்; விசேட விசாரணை
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் வைத்தியசாலைகளில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந் நிலையில், அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு பொறுப்பாக செயற்பட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, களுத்துறை வைத்தியசாலை, ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் பாணந்துறை வைத்தியசாலை ஆகியவற்றின் தகவல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவே இவ்வாறு பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை கொவிட் நிலைமையால் உயிரிழப்போரின் சடலங்கள் மேல் மாகாண வைத்தியசாலைகளில் ஆங்காங்கே கிடப்பதாக தகவல்கள் வெளியானபோதும் அவை பொய்யானது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் , வைத்தியசாலைகளின் பொலிஸ் காவலரண் அதிகாரிகள் ஊடாக இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குறித்த பொலிஸ் அத்தியட்சரை நியமித்துள்ளதாக அவர் கூறினார்.