ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு ; உண்மை சம்பவம் தொடர்பில் சக ஊடகவியலாளர்கள் வலியுறுத்து
மருத்துவமனைக்குள் அனுமதியின்றி செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரின் முறைப்பின் பேரில் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று (27) காலை 11.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை அவரிடம் விசாரணை நடைபெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அண்மையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் காயமடைந்து மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பார்வையிடும் நோக்கில் மரியசீலன் திலெக்ஸ் மற்றும் அவரது சக ஊடகவியலாளர் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அப்போது, வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளரை பார்வையிட பொறுப்பு மருத்துவரின் அனுமதி தேவையெனவும், பார்வை நேரத்திற்கு முன் அனுமதி இல்லை எனவும் கூறினர்.
அதன்படி, மரியசீலன் திலெக்ஸ் மற்றும் அவரது சக ஊடகவியலாளர் பொறுப்பு வைத்தியரிடம் அனுமதி கோரினும், அனுமதி வழங்கப்படாததால் நாகரீகமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
எனினும், பின்னர் வெளியான செய்தியில் காயமடைந்த நபர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படம் இடம்பெற்றது. இதனால், பொறுப்பு மருத்துவர் மரியசீலன் திலெக்ஸ் மீது முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு, மரியசீலன் திலெக்ஸ், "சம்பவ நாள் அன்று நான் மற்றும் என் சக ஊடகவியலாளர் மருத்துவமனை அதிகாரிகளின் அனுமதியை கேட்டோம்.
அனுமதி மறுக்கப்பட்டதால், நாம் அங்கு இருந்து நாகரீகமாக வெளியேறினோம். எங்களை எதிர்த்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை" என்று விளக்கமளித்தார்.
இச்சம்பவம் குறித்து, உடனடி விசாரணை நடத்தி உண்மை கண்டறிய வேண்டும் என சக ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.