உயர்தர பரீட்சைகள் அடுத்த வாரம்; புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம்5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணி
அதன்படி பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஐந்தாம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான கருத்தரங்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.