அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் ; மேலும் ஒருவர் கைது
அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதாகியுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சிசிடிவி காணொளிகள்
இச்சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (16) பிற்பகல் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
எவ்வாறாயினும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 'கரந்தெனிய சுத்தாவின் ஆலோசனையின் பேரில் டுபாய் நிபுண மற்றும் மல்வானை டுடூ (Tutu) ஆகியோரே இந்தக் கொலையை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குறித்த சகோதரர்கள் இருவரும் அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்குத் துப்பாக்கிகளை வழங்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவர், தாங்கள் வந்த காரிலிருந்து ஒரு பையை எடுத்து வந்து துப்பாக்கிதாரிகள் இருந்த காரில் கொடுப்பது பதிவாகியுள்ளது.