ஒரு நாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தனர்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயித்த 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணி சார்பில் ஷரித்த அசலங்க 91 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும், பத்தும் நிஷாங்க 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 269 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர் 46.5 ஒவரில் வெற்றி இலக்கை அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் 98 பந்துகளில் 98 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா 80 பந்துகளில் 55 ஓட்டங்களை எடுத்து இலங்கை பந்துவீச்சாளர்களை துவசம் செய்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார, மதீஷ பத்திரன தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.