இலங்கைக்கான நடவடிக்கைகளை இடைநிறுத்த ஆலோசனை! ஏற்படவுள்ள நெருக்கடி
பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கான தங்களது நடவடிக்கைகளை இடைநிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றதாக கூறப்படும் நிலையில் இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
(Jet A-1 )விமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தேவையான ஜெட் எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் குறைந்தபட்சம் 30 நாள் கடன் அடிப்படையில் ஜெட் எரிபொருளை வழங்கத் தயாராக இருக்கும் புதிய விநியோகஸ்தர்களை கண்டறிய வேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவோ அல்லது வேறு எந்த மாற்று முறை மூலமாகவோ ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் தற்போது இல்லை என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சில விமான நிறுவனங்கள் ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் சில விமான நிறுவனங்கள் வெளியேறுவது பற்றி ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் அவர்களும் வெளியேறிவிட்டால் மீண்டும் அவர்களை திரும்பப் பெறுவது கடினமாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.