மனைவியுடன் கள்ள உறவு; கூலிப்படைகளை ஏவி விட்ட வெளிநாட்டு வாழ் கணவன்! பறிபோன இளைஞன் உயிர்
அனுராதபுரம் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலக்கு வைக்கப்பட்டவருக்கு பதிலாக அப்பாவி இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் மறைந்திருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் கடத்தல்காரர், தனது மனைவியின் முறைகேடான கணவனை கொலை செய்வதற்காக கூலிபடைகளிடம் ஒப்பந்தம் ஒன்று வழங்கியுள்ளார்.
தவறாக சுடப்பட்ட இளைஞன்
அந்த ஒப்பந்தத்தின்படி வந்த துப்பாக்கிதாரிகள், கொலை செய்யவேண்டிய நபரை போன்று சாயலை கொண்ட இளம் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஸ்ரீ புரா பொலிஸார் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் கே. டி. சந்தன மனோஜ் என்ற 26 வயது இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மிருகங்களிடமிருந்து நெல்லைப் பாதுகாப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவியுடன் கள்ள உறவில் இருப்பவரும் , வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரியும் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நெருங்கிய நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் உருவமும், கொல்லப்பட்ட நபரின் உருவமும் ஒரே மாதிரியானவை எனவும், இந்த நபர் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தப்பியோடிய கொலையாளிகளை தேடி மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.