கெஹெல்பத்தரவின் தொலைபேசியில் நடிகைகளின் தகவல்கள் ; புகைப்படத்துடன் சிக்கிய அரசியல் தலைகள்
இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் 'கூடு நிலங்க' ஆகிய சந்தேகநபர்கள் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவிக்கையில், கெஹெல்பத்தர பத்மே 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாக தொலைபேசி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மனிதக் கொலைகள்
9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினர்.7 நடிகைகள் மற்றும் மாடல்கள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை உட்பட பல மனிதக் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கொமண்டோ சலிந்த உட்பட 5 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் ஒகஸ்ட் 30 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகிய சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு முன்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பின்னர், கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.