கிரிக்கெட் வீரர் பானுகா காதலிக்கு பரிசாக அளித்த தங்கச் சங்கிலி ; பொலிஸாரிடம் மாட்டிவிட்டது ஏன்!
கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவுக்குச் சொந்தமான தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தை, அவரது அனுமதியின்றி அடகு வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இளம் நடிகை ஹர்ஷி ரசங்கா, சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
காணொளியில், அந்தத் தங்கச் சங்கிலி ராஜபக்சவால் தனக்குப் பரிசாக வழங்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். அதோடு , தான் சந்தித்த அவமதிப்புக்காக சட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

காதலில் இருந்த காலகட்டத்தில் பரிசாக வழங்கப்பட்டது
23 வயதான ஹர்ஷி, மார்ச் 29 அன்று கடுவெல நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணைத்தொகையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். பானுக ராஜபக்ச , ஹர்ஷி, இருவரும் காதலில் இருந்த காலகட்டத்தில், ராஜபக்ச அந்தத் தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தை அவரிடம் ஒப்படைத்திருந்ததாகக் காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர்கள் பிரிந்த பிறகு, அந்தத் தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தை பானுக ராஜபக்ச நடிகையிடம் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ, அவற்றை அடகு வைத்துவிட்டதாகக் கூறி, அதற்கான பற்றுச்சீட்டை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன் மூலம் தான் சுமார் 600,000 ரூபா பெற்றதாக அவர் கூறியதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. அந்த அடகுப் பற்றுச்சீட்டை ஆதாரமாகக் காட்டி, கிரிக்கெட் வீரர் தலங்கம காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளை நடிகை எதிர்கொண்டுள்ளார்.
இவ்வழக்கு ஏப்ரல் 22 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது; அன்று நடிகையின் வசம் உள்ள தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தை அவரிடமிருந்து பெற்று, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தலங்கம காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.