நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க ஜப்பான் எடுத்த நடவடிக்கை
இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை உள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் இலங்கையின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் பட்சத்தில் சீனாவுடனான அத்தகைய சந்திப்பிற்கு ஜப்பான் தலைமை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விடுத்த கோரிக்கை
அதேசமயம் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளுக்கு அழைப்பி விடுக்குமாறு ஜப்பானை இலங்கை கோரும் என முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் (Shinzo Abe) இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும்போது அடுத்த மாதம் டோக்கியோவில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டிருந்தார்.
அதேசமயம் ஜப்பானிய தரப்புக்களின் இந்த முயற்சி தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.