சுங்க மோசடி செய்தால் அடையாளத்தை பகிரங்கப்படுத்த நடவடிக்கை
சுங்க மோசடியைக் குறைத்து, வரிகளைச் சரியாக வசூலிக்கும் வகையில், சுங்கச் சட்டங்களை மீறும் மற்றும் வரி மோசடி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் அடையாளங்களை, சுங்க வலைத்தளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட சுங்கம் தீர்மானித்துள்ளது.
மேலதிக விசாரணை
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சரியான வரியை செலுத்த ஊக்கப்படுத்துதல் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டங்களை மீறுவதைத் தடுப்பதன் மூலம் எல்லையைத் தாண்டி பொருட்கள் சட்டவிரோதமாக நுழைவதையும் வெளியேறுவதையும் குறைக்க சுங்கத்துறை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, சுங்கச் சட்டத்தின் கீழ் முறையான விசாரணைக்குப் பிறகு நடத்தப்படும் சோதனையில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விபரங்களைப் பகிரங்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் கீழ் நிறுவப்பட்ட நிதி புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சுங்கம் இப்போது பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்புப் பிரிவை நிறுவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரிவு எதிர்காலத்தில் சுங்க குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்திற்கிடமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து நிதி புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த தகவலை சுங்க வலைத்தளமான http://www.customs.gov.lk மூலம் பொதுமக்களுக்கு அறியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்.