5 வயது சிறுவனை பலியெடுத்த விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியை வேன் முந்திச்செல்ல முற்பட்டபோதே விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில், 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் ஹொரவ்பொத்தானை - விலேவெவ பகுதியைச் சேர்ந்த கௌசித ஹஸரல் (05 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.