வீதியின் குறுக்கே பார ஊர்தி கவிழ்ந்து விபத்து
பதுளை - மஹியங்கனை வீதியில், குருபுர 4-ம் கட்டைப் பகுதியில் சனிக்கிழமை (23) மாலை பார ஊர்தி ஒன்று வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹ ஓயாவிலிருந்து பதுளை நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற குறித்த பார ஊர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கிச் சென்றது.
இதன்போது, சாரதி ஊர்தியை வீதியோரத்தில் இருந்த மதில் மீது மோதி நிறுத்த முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தினால் பார ஊர்திக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.