நால்வரை பலியெடுத்த கோர விபத்து ; ஒன்று கூடிய உறவினர்களால் கடும் பதற்றம்
குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்று (25) இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகொட பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 04.50 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இருந்து சென்றதாக கூறப்படும் வேன் ஒன்றே விபத்தில் சிக்கியதாக தெரியவந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக உறவினர்கள் தற்போது திரண்டுள்ளனர்.
குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்த நிலையில், விபத்தில் மேலும், மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்சமயம் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலை பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.