கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் பாரிய விபத்து: இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் இன்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (04-08-2022) மாலை பாலாவி சீமெந்து தொழிற்சாலை சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் புத்தளத்தில் இருந்து மதுரங்குளி நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்றும் பாலாவியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர சேவை அம்யூலன்ஸ் உதவியுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் சொகுசு காருக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக புத்தளம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.