சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.கவுடன் இ.தொ.கா. சங்கமம்! ஜீவனுக்கும் அமைச்சுப்பதவி
சர்வக்கட்சி இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில், அங்கம் வகிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதம அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.கவுடன் இ.தொ.கா. சங்கமமாகவுள்ளது. இதற்கமைய புதிய அமைச்சரவை பெயர் பட்டியலில் ஜீவன் தொண்டமானுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசில், மொட்டுகட்சிதவிர, ஏனைய கட்சிகளுக்கான, அமைச்சுகளை ஒதுக்கும் பொறுப்பு பிரதமரிடமே கையளிக்கப்பட்டுள்ள்து. அந்தவகையிலேயே ஜீவன் தொண்டமானின், பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
அமைச்சு பதவியை ஏற்பதற்கு காங்கிரஸ் தரப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் கட்சி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் திங்கட்கிழமை (23) ஜீவன் தொண்டமான், அமைச்சராக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு முதன்முறையாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை ஐக்கிய தேசியக்கட்சியே 1977 இல் வழங்கியது. ஜே.ஆர். ஜயவர்தனவே இந்த வாய்ப்பை வழங்கினார். ‘தலைவர்’ தொண்டமானை, ‘அமைச்சர்’ தொண்டமானாக்கியது ஜே.ஆர்.தான்.
இந்நிலையில் அவரின் மருமகன்தான் தற்போதைய பிரதமர் ரணில் ஆவார். 1947 ஆம் ஆண்டு முதலே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் ‘அரசியல் உறவு’ இருந்துவருகின்றது.
77 இற்கு பிறகு அந்த உறவு மேலும் வலுவடைந்தது. எனினும், 2004 இறுதி காலப்பகுதியில் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையிலேயே சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு அந்த உறவை காங்கிரஸ் புதுப்பித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.