நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ஒழிக்கிறது அரசு ; அரசாங்கத்தின் போக்கை விமர்சிக்கும் சஜித்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்துள்ள போதிலும், நாட்டின் இலட்சக்கணக்கான ஏனைய ஓய்வூதியதாரர்களின் அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
பல ஜனநாயக நாடுகளில் இவ்வாறான ஓய்வூதிய ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், இது மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதுடன், ஊழல்களைக் குறைக்கவும் உதவும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 7.5 இலட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து தெளிவற்ற நிலையில் இருக்கும் அரசாங்கம், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
2020 - 2024 வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற சுமார் 1.54 இலட்சம் அரச ஊழியர்களுக்கு, 2025–2027 காலப்பகுதிக்காக அறிவிக்கப்பட்ட வேதன அதிகரிப்புக்கு ஏற்ப முறையான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளால் உருவாக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பல ஓய்வூதியதாரர்கள் நன்மைகளை இழந்துள்ளதாகவும், ஓய்வூதிய முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட வட்டிச் சலுகைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், வாக்குறுதி அளிக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்பு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.