ஆடி மாதம் 3வது வெள்ளி மிகவும் விசேஷமான நாள் ஏன் தெரியுமா?
ஆடிமாதத்தில் வரும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிக விசேஷம் என்றும் ஆடியில் வரும் வெள்ளிக்கிழமைகள் குறித்தும் குறிப்பாக 3-வது ஆடி வெள்ளிக்கிழமையின் சிறப்புகள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.
இதில் வெள்ளிக்கிழமைக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அதிலும் 3வது வெள்ளி மிக மிக விஷேசம் ஆகும்.. ஏன் தெரியுமா? நவகிரஹங்களில் களத்திரகாரகன், பணம், செல்வாக்கு ஆகியவற்றை தரக்கூடியவன் சுக்கிரன்.வெள்ளிக்கிழமை அந்த சுக்கிரனுக்குரியது.
அம்பிகையை ஆராதிக்கக் கூடிய தினம் வெள்ளிக்கிழமை. எல்லா மாதமுமே வெள்ளிக்கிழமைகள் சுக்ரவாரம் என்று போற்றப்படுவதும் அன்று அம்மனை ஆராதிப்பதும் விசேடமான ஒன்றாக கருதப்படுகின்றது.
ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளுமே விசேஷம் தான் என்றாலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைக்கு தனிச் சிறப்பு ஒன்று உண்டு, ஆடி மாதத்தை தேவர்களின் பிரதோஷ காலம் என்கிறது சாஸ்திரம்.
அதாவது நம்முடைய ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் ஆடிமாதம்தான் தேவர்களின் மாலை நேரத்தின் தொடக்கம்.
அதாவது தினப் பிரதோஷ நேரமான மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். பிரதோஷ நேரத்தில் தினமுமே விளக்கேற்றி வைத்துக் கும்பிடச் சொல்வார்கள். இதில் உச்சி காலமாகக் கருதப்படும் நேரம்தான் ஆடி மாத மூன்றாவது வெள்ளி.
ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் என்பதால் பெரும்பாலும் ஆடி மாதத்தில் 5 வெள்ளிக் கிழமைகள் வரும். 5 வெள்ளிகளில் நடுவே அதாவது உச்சமாக இருப்பது 3 வது வெள்ளி. கடைசி வார வெள்ளிக்கிழமையில் பல சமயம் வரலக்ஷ்மி விரதம் அமையும், இதுவும் விசேஷம்தான்.
இந்த ஆண்டில் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 1ஆம் திகதி (2-8-2024) அதாவது குரோதி வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் வருகிறது.
அன்றைய தினம் சிவனுக்கும் உரியதான மாத சிவராத்திரியாக அமைவதும், 27 நட்சத்திரங்களிலேயே மகாலக்ஷ்மிக்கு உரிய திரு என்கிற அடைமொழியோடு உள்ள 2 நட்சத்திரங்களில் ஈஸ்வரனுக்கு உரியதான திருவாதிரை நட்சத்திரமும் அன்றைய தினத்தில் அமைவது வெகு விசேஷம். எனவே ஆடி மாதத்தில் எல்லா நாட்களுமே சிறப்பானவைதான்.
இதில் வெள்ளிக்கிழமை விசேஷம், அதிலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகூடுதல் விசேஷம். இதைப் புரிந்துகொண்டு, அன்றைய தினம் அவரவர் வீட்டிலாவது ஒரு விளக்கை ஏற்றிவைத்து அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்
வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அம்பாளை வணங்கி வந்தால் உங்கள் வீடுகளில் வருடம் முழுக்க மகிழ்ச்சியும் சகல செளபாக்கியமும் நிலைத்து இருக்கும்
அதுமட்டுமல்லாம, வீட்டில் தெய்வ கடாட்சம் நிறையும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பெண்களுக்கு சுமங்கலி பாக்யம் நிலைக்கும். வம்சம் தழைக்க வாரிசு பிறக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அதனால் ஆடி மாதம் அம்பிகையை மறக்காமல் வழிபடுவது எல்லாவிதமான நன்மைகளும் உங்களை வந்து சேரும் என நம்பப்படுகின்றது.