கொழும்பில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி; மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு
கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவில்களின் 152 ஆவது ஆண்டின் ஆடிவேல் வெள்ளி ரத பவனி காரணமாக , வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று (28) காலை 7.30 மணிக்கு புறக்கோட்டை கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் ஆடிவேல் வெள்ளி ரத பவனி , இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு
ஆடிவேல் வெள்ளி ரத பவனி கொழும்பு செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, பிரதான வீதி, மணிக்கூட்டு கோபுரம் சந்தி, லைடன் பெஸ்டியன் வீதி , யோர்க் வீதி, பரன் ஜயதிலக்க மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியை சென்றடையும்.
அத்துடன் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி வழியே காலி வீதியில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி பயணிக்கும்.

பின்னர் இரவு 7.00 மணியளவில் பழைய கதிரேசன் கோவிலையும், இரவு 8.30 மணியளவில் புதிய கதிரேசன் கோவிலையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திரும்பிச் செல்லும் ஆடிவேல் வெள்ளி ரத பவனி ஜூலை 31 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, புறக்கோட்டை கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் கோவிலை நோக்கிப் பயணிக்கும்.

இந்த ஆடிவேல் வெள்ளி ரத பவனி நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட இந்த நேரங்களில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி செல்லும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.