வீட்டு வாடகையை விட பயணம் மலிவு ; நாடோடிகளாக மாறிய இளம் குடும்பம்
இங்கிலாந்தில் வீடு வாடகைக்கு வாழ்வதை விட உலகைச் சுற்றிப் பார்ப்பதே குறைந்த செலவாகும் என்பதை உணர்ந்த பிரித்தானிய குடும்பம் ஒன்று, அனைத்து உடைமைகளையும் விற்று குழந்தைகளுடன் உலகச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
குளோயி எல்லிஸ் (27) மற்றும் அவரது கணவர் கானர் எல்லிஸ் (29) ஆகியோர், பிள்ளைகள் பிறப்பதற்கு முன் உலகைச் சுற்றிப் பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்பாராத கர்ப்பம் காரணமாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், குழந்தைகள் வளர்ந்த பின்னர் பயணம் செய்வதற்கு பதிலாக, தற்போது பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

2024 டிசம்பரில் ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்த இந்த தம்பதியினர், 2025 பிப்ரவரியில் தங்கள் வீட்டை விற்பனைக்கு வைத்தனர். வீடு விற்க பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், மூன்று நாட்களுக்குள் வீடு விற்றது.
இதையடுத்து, விசா கிடைக்கும் வரை இங்கிலாந்தில் Airbnb-யில் தங்க மாதம் £3,000 முதல் £4,000 வரை செலவாகும் என்பதை உணர்ந்த அவர்கள், அதைவிட உலகைச் சுற்றிப் பார்ப்பதே மலிவு என முடிவெடுத்தனர்.
தங்கள் கார் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் விற்று, இரண்டு முதுகுப் பைகளில் தேவையான உடைகள் மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த நவம்பர் 7ஆம் திகதி தாய்லாந்து நோக்கி பயணத்தைத் தொடங்கினர். முதல் மாதத்தில் சுமார் £2,000 மட்டுமே செலவழித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சியாங் மே நகரில் தங்கியுள்ள இந்த குடும்பம், @ellisfamily_adventures என்ற சமூக வலைதள கணக்கின் மூலம் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறது.
மனிதவளத் துறையில் பணியாற்றிய குளோயி, “ஆடம்பரப் பொருட்கள் அவசியமில்லை என்பதை இந்தப் பயணம் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. குழந்தைகள் புதிய உணவுகளையும், இடங்களையும் அனுபவித்து மகிழ்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

சியாங் மேயில் ஐந்து வாரங்களுக்கு நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கொண்ட இரண்டு படுக்கையறை வீடு ஒன்றை £1,000க்கு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், பிரிட்டனில் இதுபோன்ற வசதிக்கு ஒரு இரவுக்கு £200 செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாவோஸ், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள இந்த தம்பதியினர், பயணத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு ‘உலகப் பாடசாலை’ முறையில் கல்வி அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
பின்னர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் குடியேறி, அவர்களை முறைப்படி பாடசாலையில் சேர்க்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். “வேலையும் வீடும் இல்லாத இந்த நேரமே பயணிக்க ஏற்ற நேரம் என்று முடிவு செய்தோம். கோவிட் காலம் வாழ்க்கையைப் பற்றி மறுபடியும் சிந்திக்க வைத்தது” என குளோயி கூறியுள்ளார்.