அதிவேக நெடுஞ்சாலைகளில் முப்படையினரால் விநியோகிக்கப்பட்ட பயணச்சீட்டு
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அதிவேக வீதியில் பயணச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதிவேக வீதி கட்டமைப்பை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 26 தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 11,000 உறுப்பினர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை உரிய முறையில் இடம்பெறாமை மற்றும் எஞ்சிய சுகயீன விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படைமைக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பணியில் முப்படையினர்
நேற்றைய தினம் (22.11.2023) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அதிவேக வீதியில் பயணச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
சில இடங்களில் பயணச்சீட்டு இயந்திரங்களை ஊழியர்கள் மறைத்து வைத்திருந்தமையினால் பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கையால் எழுதப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயில்களில் இராணுவ உத்தியோகத்தர்களினால் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மத்திய அதிவேக வீதியில் கடற்படையினால் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
தெற்கு அதிவேக வீதியின் கஸாகல நுழைவாயிலிலும் கொட்டாவை நுழைவாயிலிலும் இராணுவத்தினரே பயணச்சீட்டு விநியோகித்தனர்.
இராணுவத் தளபதியும் கொட்டாவை நுழைவாயிலுக்கு சென்று நிலைமையை அவதானித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கதாகும்.