போலி ஆவணத்தை கொடுத்து பிணையில் சென்ற திருடன்! திகைப்பில் யாழ் பொலிஸார்
யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பிணை எடுப்பதற்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கச்சத்தீவு திருவிழாவிலும் சங்கிலி அறுத்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
போலியான பிணை ஆவணங்கள்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதன் போது மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை ஆவணங்கள் , கிராம சேவையாளர் ஒப்பம் , இறப்பர் முத்திரை என்பன போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் என அடையாளம் காணப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நீதிமன்றங்களுக்கு போலியான ஆவணங்களை செய்து கொடுத்து வரும் நபரா ? இதற்கும் முன்னரும் இவ்வாறான போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தாரா ? என பொலிஸார் கடுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்