காற்றாலை அமைக்க மணல் ஆய்வுக்கு வந்த குழு ; மக்களால் விரட்டியடிப்பு!
மன்னார் - பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழு அங்கிருந்து வெளியேறியது.
பேசாலை கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்களுடன் குழு ஒன்று வருகை தந்ததை அறிந்து கொண்ட பிரதேச மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகை தந்த குழுவினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன் போது பேசாலை பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்கள் ஏற்றி வந்த டிராக்டர் இயந்திரத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து வந்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.