வீட்டைவிட்டு வெளியேறிய காத்தான்குடி சிறுமிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கொழும்பு செல்லவிருந்த காத்தான்குடி இரு சிறுமிகளை அறையில் அடைத்துவைத்து பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,
பெற்றோர்களின் தொல்லை தாங்கமுடியாத 14 வயதுடைய இரு காத்தான்குடி சிறுமிகள் கொழும்புக்குச் செல்வதற்காக கடந்த 2 ஆம் திகதி புதன்கிழமை காலை பாடசாலை செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள்
சிறுமிகள் பஸ்ஸில் மட்டக்களப்பு நகருக்கு சென்று பாடசாலை உடைகளை மாற்றிவிட்டு கொழும்புக்குச் செல்வதற்காக பஸ்தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளனர்.
இதன்போது, இவர்கள் அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றில் ஏறி ஓட்டுமாவடி செல்வதற்கு பஸ் பயணச்சீட்டைப் பெற்றுள்ளனர்.
இருவரும் ஓட்டுமாவடியில் இறங்காமல் பஸ்ஸிலேயே உறங்கிய நிலையில், பஸ் சாரதியும் நடத்துனரும் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுமிகளையும் எழுப்பிவிட்டு ஓட்டுமாவடியை கடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சிறுமிகள் தாங்கள் கொழும்புக்கு செல்லவிருப்பதாக பஸ் சாரதி மற்றும் நடத்துனரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும் சிறுமிகளை கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் ஏற்றிவிடுவதாகக் கூறி திருகோணமலையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று இரு நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
அடைத்துவைத்து பாலியல் துஷ்பிரயோகம்
அதன்பின்னர் சிறுமிகளை திருகோணமலையிலிருந்து அழைத்துச்சென்று நேற்று (04) இரவு 10 மணிக்கு காத்தான்குடி பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து , பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்று நடந்த சம்பவம் தொடர்பில் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருகோணமலை மற்றும் கல்முனை நாற்பட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 27 வயதுடைய பஸ் நடத்துனரும் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.