அனுராதபுர பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை ; பிணையில் விடுவிக்கப்பட்டவர் கைது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்து அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்து கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டை சோதனை செய்த போது கைக்குண்டு
இருப்பினும், சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த போது அங்கிருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமைய அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருக்கான பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
வைத்தியர் வழக்கம் போல் காத்திருப்பு பணிக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையில், பின்னர் தனது கடமையை முடித்து இரவு 7.00 மணியளவில் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வைத்திய நிபுணர் அதிகாரிகள் மாத்திரம் வசிக்கும் உத்தியோகபூர் இல்லத்திற்கு நடந்து சென்றார்.
வைத்தியர் இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வைத்தியரின் கை மற்றும் , கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றதுடன், வைத்தியரின் கையடக்க தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, பெண் வைத்தியர், வைத்தியசாலையின் வார்டுக்குத் திரும்பி வந்து, தனது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து சம்பவம் குறித்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இராணுவ சேவையில் இருந்து தலைமறைவான சந்தேக நபர், கிரிபந்தலகே நிலந்த மதுர ரத்நாயக்க, பின்னர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதேவேளை சந்தேக நபர் மற்றொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், முன்னாள் இராணுவ வீரர், அடையாள அணிவகுப்பின் போது சித்திரவதைக்கு உள்ளான வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சிறை வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.