விந்தணு வங்கி சேவை மூலம் பத்து பெண்கள் கருத்தரிப்பு
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் தம்பதிகள் மற்றும் தனிநபர்களிடையே மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்வதில் விந்தணு வங்கி பாரிய திருப்புமுனையை எற்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம்
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விந்தணு வங்கியில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்ய பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பத்து பெண்கள் கருத்தரித்துள்ளனர்.
மேலும் 200க்கும் மேற்பட்டோர் தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர். மலட்டுத்தன்மையால் போராடும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்குவதே இந்த சேவையின் முதன்மை நோக்கம் ஆகும்.
விந்தணு தானம் செய்ய விரும்பும் ஆண்கள், தானம் செய்வதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், விந்தணுவை தானம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் உதவி கோரும் தம்பதிகள் வைத்தியசாலையை தினமும் தொடர்பு கொள்கிறார்கள்.
இந்தச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.