கனடாவில் புலம்பெயர்ந்தோர் பயன்பெறும் வகையில் வரவுள்ள ஒரு புதிய திட்டம்!
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பகல் நேரக் காப்பகங்கள் (daycare) குறித்த ஒரு விடயத்தை கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, (Justin Tredeau) பேசியிருந்தார்.
இந்நிலையில் 6 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு, அவர்களை பகல் நேரக் காப்பகத்தில் விடுவதற்காக, நாள் ஒன்றிற்கு 10 டொலர்கள் வழங்கப்பட உள்ளது. அதற்காக, 30 பில்லியன் டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபடசம் 9.2 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. அரசு வழங்கும் இந்த உதவியின் மூலம், 2022 இறுதிவாக்கில், கியூபெக் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் குழந்தைகளின் பகல் நேரக் காப்பகங்களின் கட்டணம் சராசரியாக 50 சதவிகிதம் வரை குறையும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் புலம்பெயர்ந்தோருக்கு என்ன நன்மை இருக்கு? புலம்பெயர்வோர் கனேடியர்களை விட இளம்வயதிலேயே கனடாவுக்கு குடிபெயர விழைகிறார்கள். அப்படியானால், அவர்கள் சிறு குழந்தைகளை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் வேலைக்கு செலும்போது குழந்தைகளை காப்பகங்களில் விடவேண்டிய நிலைமையும் கட்டாயம் இருக்கும். சராசரி கனேடியர்களைப் போல, புலம்பெயர்ந்தோருடன் அவர்களது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள, அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பார்கள் என்று கூறமுடியாது.
மேலும், பகல் நேரக் காப்பகங்களில் விடும் அளவுக்கு பெரிய வருவாயும் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக புலம்பெயர்ந்த பெண்கள் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். கனடாவுக்கு புதிதாக வருகை தரும் பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கனடாவுடன் ஒருங்கிணைந்து வாழ கஷ்டப்படுவதற்கு இந்த பகல் நேரக் காப்பகங்களில் குழந்தைகளை விட இயலாமை ஒரு காரணமாகும்.
இதேவேளை, குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு யாரும் இல்லாததால், பெண்கள் வீட்டிலிருக்கவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படலாம். அதனால், அவர்கள் கனடாவில் வேலைக்குச் செல்ல முடியாத ஒரு நிலைமையும், அதனால் சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழ்வதில் பிரச்சினையும் ஏற்படலாம்.
இவ்வாறான நிலையில் நாள் ஒன்றுக்கு 10 டொலர்கள் உதவி என்னும் இந்தத் திட்டம், பல புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை பகல் நேரக் காப்பகங்களில் விட்டு விட்டு, வேலைக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும். அவர்கள் வேலைக்கு செல்வதால் வருவாய் வரும், வருவாய் வருவதால், அவர்கள் செலவு செய்யும் திறனும் அதிகரிக்கும்.
இதனால் அவர்கள் சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழ்வதும் மேம்படுவதோடு, கனேடிய தொழிலாளர் சந்தையும் மேம்படும். இதோடு கனடாவுக்கு புதிதாக வந்துள்ள குழந்தைகளுக்கும் நல்ல கல்வியும் புதிய நண்பர்களைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.