மாந்திரீகம் பெயரில் பெண்ணை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த மர்மநபர்
இந்தியாவில் கரூர் மாவட்டம் கடவூர் அருகே குடும்ப கஷ்டத்தை நீக்குவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த விபூதி கொடுத்து மயக்கமடையச் செய்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயக்க மருந்து கலந்த விபூதி
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் கம்பங்கூழ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனது உறவினரிடம் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்களை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

அந்த உரையாடலை கவனித்த மர்மநபர் ஒருவர், கம்பங்கூழ் வாங்க வந்தது போல் நடித்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், "உங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கி தருகிறேன். அதற்கு ஒரு சிறிய மாந்திரீகம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மர்மநபர், பெண்ணை கடைக்குள் அழைத்துச் சென்று, தன்னிடம் ஏற்கனவே வைத்திருந்த மயக்க மருந்து கலந்த விபூதியை கொடுத்து அதை வாயில் போடுமாறு கூறியுள்ளார்.
அந்த விபூதியை வாயில் போட்ட சிறிது நேரத்திலேயே பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, மர்மநபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர் அணிந்திருந்த அரை பவுன் தாலி, அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் கால்விரல்களில் அணிந்திருந்த வெள்ளி மெட்டிகளையும் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தனது ஆடைகள் கலைக்கப்பட்டு அலங்கோலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்த அவர் உடனடியாக பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.