ஐம்பது மீற்றர் வரை இழுத்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்; பேருந்தால் தந்தையை பறிகொடுத்த சிறுமி
கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் மகளை பாடசாலைக்கு அழைத்துச்சென்ற தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழு வயதான பாடசாலை மாணவி படுகாயமடைந்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனது மகளை குப்பியாவத்தை பாடசாலைக்கு கொண்டு செல்வதற்காக மெகொட கொலன்னாவையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
தந்தை உயிரிழப்பு
அப்போது, கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் அதே திசையில் பயணித்த பஸ் திடீரென இடப்புறம் திரும்பியதில் மோட்டார் சைக்கிளை சுமார் ஐம்பது மீற்றர் வரை இழுத்துச் சென்றதிலேயே இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.
மெகொட கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பஸ் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த பொலிஸார் , பாதுகாப்பு கருதி பஸ் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.