சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியத்தில் பாரிய தீ
பாணந்துறை கிரிபெரியவில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் உள்ள களஞ்சியசாலையில் கொரோனா பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த களஞ்சியசாலையில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
30 தீயணைப்பு வீரர்கள் பணியில்
இந்நிலையில் தீயை அணைப்பதற்கு ஹொரணை, களுத்துறை, மொரட்டுவவை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகள் அழைக்கப்பட்டன.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் உட்பட 11 தண்ணீர் பவுசர்களுடன் 30 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
கொரோனா உடைகள், முகமூடிகள், சத்திரசிகிச்சையின்போது அணியும் ஆடைகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.