இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்!
ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ரம்ஸோர் (Peter Ramsauer) உயர்மட்ட சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக இன்று நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.
இருதரப்புத்தொடர்புகளை வலுப்படுத்தும்
ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அறிக்கையாளராகப் பதவிவகிக்கும் பீற்றர் ரம்ஸோரின் (Peter Ramsauer) வருகை இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகளை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகின்றதாக பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சீபேற்றுடன் இணைந்து அவர் அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பைப் புலப்படுத்தும் வெற்றிகரமான செயற்திட்டங்களில் ஒன்றான மொரட்டுவையில் அமைந்துள்ள சிலோன் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கும் அவர் (Peter Ramsauer) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் காலியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் அவர் (Peter Ramsauer) பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.