கொழும்பில் ஈரானிய தூதரகத்தின் மீது மோதிய கார்; தீவிரவாதச் செயலா!
கொழும்பிலுள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புச் சுவரை, சொகுசு கார் ஒன்று மோதிச் சேதப்படுத்திய சம்பவம், ஒரு சாதாரண வாகன விபத்தா அல்லது பயங்கரவாத அல்லது தீவிரவாதச் செயலா என்பது குறித்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31-ஆம் திகதி அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் தீவிரத்தன்மை குறித்து, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் சின்னமன் கார்டன்ஸ் (Cinnamon Gardens) பொலிஸார் விளக்கமளித்தனர்.

விரிவான விசாரணைக்கு உத்தரவு
விபத்துக்குள்ளான அந்தச் சொகுசு காருக்குள் வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ மறைத்து வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
அரச பகுப்பாய்வாளர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவு மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், காரைச் செலுத்திய 27 வயதுடைய மொஹமட் தாரிக் மன்சூர் மற்றும் அவருடன் காரில் பயணித்ததாகக் கூறப்படும் மொஹமட் இன்ஹாம், மயூரன் கனகசுந்தரம், மொஹமட் உஸ்மான் ஆகிய நால்வரையும் சின்னமன் கார்டன்ஸ் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இருப்பினும், இந்த வழக்கு கடந்த 2-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வேறு கோணமொன்றை முன்வைத்தனர்.
அதாவது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட ஒரு தற்செயலான வாகன விபத்து மட்டுமே என அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்த உண்மையான நிலையைத் தெளிவுபடுத்த, சந்தேக நபர்களின் குடும்ப உறவினர்கள் ஈரானியத் தூதுவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், கைது செய்யப்பட்ட நால்வரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதேவேளையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை உறுதிப்படுத்துவதற்காக, அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் உட்பட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இம்மாதம் 30-ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.