23 வயதுடைய திருமணமான நபர் பரிதாப மரணம்
வாகல்கட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகல்கட பொலிஸார் தெரிவித்தனர்.
கெபிதிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே கன்றை வயிற்றில் சுமந்திருந்த எருமை மாடு ஒன்று மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, கன்றை வயிற்றில் சுமந்திருந்த எருமை மாடும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகல்கட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.