மக்களுக்கு இடையூறு ; அதிகாலை பந்தயம் வைத்து ஓடிய 9 பேர் கைது!
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி செலுத்திய நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை பந்தயம் வைத்து ஓடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 முச்சக்கர வண்டிகள் மற்றும் 09 சாரதிகள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்ட சாரதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மக்கள்
அதேவேளை கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த பந்தயத்தில் குறித்த குழுவினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை ராகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய போது, அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைதான சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.