ஆறு மாதங்களில் 871,446 TikTok காணொளிகள் நீக்கம்!
நாட்டில் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 871,446 TikTok காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் காலாண்டில் 441,089 காணொளிகளும், இரண்டாவது காலாண்டில் 430,357 காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளன.

மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த காணொளிகள்
உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளில் 19.5 சதவீதம் உணர்வுபூர்வமான அல்லது முதிர்ச்சியான உள்ளடக்கங்களாகவும், 16.1 சதவீதம் மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த உள்ளடக்கங்களாகவும் காணப்பட்டுள்ளன.
ஆபத்தான செயல்கள், பாலியல் சார்ந்த நடத்தைகள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களும் முக்கிய காரணங்களாகப் பதிவாகியுள்ளன. எனினும், இலங்கையில் நீக்கப்பட்ட காணொளிகளின் வகைகள் தொடர்பான தனிப்பட்ட விபரங்களை TikTok வெளியிடவில்லை.
இதற்கிடையில், இலங்கையில் நீக்கப்பட்ட காணொளிகளில் 33,011 காணொளிகள் பின்னர் மீளமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது காலாண்டில் நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4 சதவீதமானவை பயனர்களின் முறைப்பாடுகளுக்கு முன்னரே அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் இரண்டாவது காலாண்டில் 188.3 மில்லியன் காணொளிகளை TikTok நீக்கியுள்ளதுடன், அவற்றில் 97.4 சதவீதமானவை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தானியங்கி கண்காணிப்பு முறைமைகள் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.