முறைக்கேடாக பயன்படுத்திய 1.17 மில்லியன் ரூபாவை செலுத்தினார் முன்னாள் ஆளுநர்
வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் , தனது பதவிக்காலத்தில் முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 11,320 லீற்றர் எரிபொருளுக்கான செலவான 1.17 மில்லியன் (11,70,000) ரூபாவை செலுத்தியுள்ளார்.
முன்னாள் ஆளுநரால் 11,320 லீற்றர் எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையானது சுற்றுநிரூப அறிவுறுத்தல்களுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயக திணைக்களம், அந்த 1.17 மில்லியன் ரூபாயையும் மீளப் பெறுமாறு மாகாண சபைக்கு அறிவுறுத்தியிருந்தது.

பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இதனையடுத்து, முன்னாள் ஆளுநர் குறித்த தொகையைப் பணமாகச் செலுத்தி நிவர்த்தி செய்துள்ளதாக வடமத்திய மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் அருண ரவி, புதன்கிழமை (04) அன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அநீதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என பிரதிப் பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜ்னாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், வடமத்திய மாகாண ஆளுநராக மஹிபால ஹேரத் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.