இலங்கையில் அதிவேக வீதிகளில் 856 விபத்துக்கள்!
அதிவேக நெடுஞ்சாலைகளில் 2023ஆம் ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில் மொத்தம் 856 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தெற்கு, மத்திய மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் பதிவாகிய குறித்த விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் 1,675 வாகன விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 13 பேர் பலியாகியதுடன், 25 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அதிகமானோர், சாரதிகளுக்கு தமது வாகனங்களைப் பற்றிய சரியான அறிவு இல்லாதது மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே விபத்துக்களின் அதிகரிப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (15) மாலை 6 மணி வரையான 32 மணி நேர காலப்பகுதிக்குள் விபத்துக்குள்ளான 200 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 78 பேர் வெள்ளிக்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த காலப்பகுதியில் தீ விபத்துக்குள்ளான ஒருவர் மாத்திரமே இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் குமார விக்கிரமசிங்க தெரிவித்தார்.