பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைது
அனுராதபுரம் விகாரைக்கு அருகில், புதையல் தோண்டியமைக்காக பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் அனுராதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது.
சந்தேகநபர்கள் பதுளை, மாளிகாவத்தை, பதவிஸ்ரீபுர, கிராதுருகோட்டை மற்றும் வரகாபொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணை விடுவிக்குமாறு தொலைபேசி அழைப்புகள்
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்தது.
அதேவேளை அவர் இதற்கு முன்பும் புதையல் வேட்டை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் உட்பட எட்டு பேரும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்களை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பெண்ணை விடுவிக்குமாறு வலியுறுத்தி அனுராதபுரம் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.