11 வயது சிறுவன் செலுத்திய வாகனத்தில் மோதி எட்டு தேரர்கள் பலி
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர். முவெங் (Mueang) மாவட்டத்தின் பான் நா சி நுவான் (Ban Na Si Nuan) பகுதியில் நேற்று (02) நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்து நடந்த உடனேயே விரைந்து செயற்பட்ட பொலிஸாரும் நிவாரணக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, விபத்தின் காரணமாக பல தேரர்கள் வீதியோரமாக விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் ஐந்து தேரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய 13 தேரர்களும் தற்போது அவசரமாக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தகாத உறவிலிருந்தவருடன் உல்லாசம் ; இறுதியில் கணவன் அரங்கேற்றிய கொடூரம் ; சாக்குபையில் காத்திருந்த ஷாக்
ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டியை 11 வயது சிறுவன் ஒருவனே செலுத்தியுள்ளார்.
அவர் தனது பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் எந்தவொரு அனுமதியும் இன்றி இந்த வாகனத்தை செலுத்திச் சென்று, இந்த பாரதூரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாய்லாந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.