கொழும்பில் 76 இந்தோனேசிய பிரஜைகள் கைது ; சுற்றுலா விடுதிக்குள் சிக்கிய குழு
நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் இன்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அதன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுலா விசா
இவர்கள் சுற்றுலா விசா மற்றும் வணிக விசா வசதிகளின் கீழ் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களில் 36 பேரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 40 இந்தோனேசியர்களும் விசா நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜவின் அறிவுறுத்தலின் பேரில், இவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.