24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது
கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மூவர் புனர்வாழ்வளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (20) வரை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளில் 753 போதைப்பொருள் கைப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன்போது, ஹெரோயின் 231 கிலோ 255 மில்லிகிராம், ஐஸ் 1 கிலோ 304 மில்லிகிராம், கஞ்சா 546 கிலோ 142 கிராம், கஞ்சா செடிகள் 43,122, குஷ் 1 கிலோ 52 கிராம், ஹஷீஷ் 11 கிராம், மெத்தம்பிட்டமின் 174 கிராம், மெத்தடோன் 257 கிராம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.