இலங்கையில் மூலிகைச் விதைகளை உட்கொண்ட 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!
பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை மாணவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பாடசாலை சிறுவன் சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை உட்கொண்ட நிலையில் 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
பின்னர் அவர்களை உடனடியாக ஆம்புலனஸ் வண்டி வரவழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் எந்த விதமான ஆபத்துக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.